விடைப்பெறுகிறேன் இளைஞர்களே....
பயனுள்ள புத்தகத்தை தினமும் ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அறிவுறுத்தினார்.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:
நல்ல புத்தகங்கள் கற்பனைத் திறனை வளர்க்கும். இதனால் படைப்பாற்றல் வளரும்.
படைப்பாற்றலால் சிந்திக்கும் திறன் பெருகும். சிந்திக்கும் திறன் அறிவை வளர்க்கும். அறிவு மனிதனை மகானாக்கும். அதுதான் புத்தகம்.
இந்தப் புத்தகத் திருவிழா அறிவுக் கண்ணை, மனக்கண்ணை திறக்கும் விழா. இதில் கலந்துகொள்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
"நற்புத்தகங்கள் எனது அரும்பெரும் ஆசான்' என்ற தலைப்பில் உங்களுடன் கலந்துரையாட வந்திருக்கிறேன்.
நாம் எவ்வளவு புத்தகங்கள் படித்தோம் என்பது முக்கியமல்ல. அதில் எத்தனை புத்தகங்களை உள்வாங்கி படித்தோம் என்பதுதான் முக்கியம். பேச்சு வழக்கில் இருந்த தமிழை காகிதமாக்கி வழங்கியதில் முன்னோர்களின் பங்கு அளப்பரியது.
அதில் திருவள்ளுவர், அனைவராலும் பின்பற்றக்கூடிய திருக்குறளை உலகுக்கு தந்தவர், தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஓலைச்சவடிகளை பாதுகாத்து தந்தவர், ஜி.யு. போப் மதம் கடந்து, நாடு கடந்து, மொழி கடந்து தமிழுக்கு தொண்டாற்றியவர், பாரதியார் 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.
புத்தகங்கள் படியுங்கள், படித்துக்கொண்டே இருங்கள். இன்று முதல் மாணவர்களாகிய நீங்கள், இளைஞர்களாகிய நீங்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்; தினமும் 1 மணி நேரம் பயனுள்ள புத்தகத்தை படிக்க நேரம் ஒதுக்குவேன் என்று. அதனால், புத்தகங்கள் உங்களுக்கு நண்பனாகும். ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகம் ஏற்படுத்த வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
விழாவில் அரியலூர் மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அப்துல்கலாம் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நன்றி தினமணி - http://www.dinamani.com/tamilnadu/2015/07/18/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-/article2926133.ece
No comments:
Post a Comment